மத்திய அமைச்சராகிறார் நயினார் நாகேந்திரன்? – தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் – tamilnadu bjp gets change soon vanathi seenivasan as a bjp leader nayinar becomes a central minister

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதை அடுத்து சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றிப் பெற்றது. மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனும் வெற்றிப் பெறாத நிலையில் கடந்த முறை பாஜக வென்ற தொகுதிகளையும் தக்கவைக்கவில்லை.

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி வி த லீடர்ஸ் எனும் புதிய அமைப்பை தொடங்கினார். இதனால் பாஜகவில் இருந்த பெரும்பாலான இளைஞர்கள் விலகி அண்ணாமலையின் அமைப்பில் ஐக்கியமாகிவிட்டனர். தமிழ்நாட்டில் பாஜக அசுர வளர்ச்சி அடையும் என கூறி வந்த அண்ணாமலை இப்போது பாஜக தலைமையை கேள்விக்கனைகளால் வதைத்து வருகிறார். இத்தகையச் சூழலில், நயினார் நாகேந்திரனை மாற்றி வேறொரு தலைமையை நியமிக்க டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாகவும், குறிப்பாக ஒரு பெண் தலைவரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

நயினார் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம்

நயினார் நாகேந்திரனும், தேசிய மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வானதி சீனிவாசனும் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறார்கள் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் இருவரது டெல்லி பயணமும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனிடையே, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு மாற்றாக நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் வானதி சீனிவாசன் கண்டனம்

காங்கிரஸ் அரசின் அரஜாகப் போக்கையும், இப்போது மத்திய பாஜக அரசை கலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் வன்முறை போராட்டத்தையும் ஒப்பிட்டு சிலர் பேச தொடங்கியுள்ளனர் என்று வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலையை வானதி சீனிவாசன் மறைமுகமாக சாடியுள்ளார். இதைவிட அபத்தம் இருக்கவே முடியாது என்றும், பாஜகவால், பிரதமர் மோடியால் அரசியலில் அடையாளம் பெற்ற சிலர், இப்போது பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்த்தால் அரசியல் லாபம் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார். கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள்தான் எனவும் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர்நோக்கும் வானதி

தமிழக பாஜக தலைவர் பதவியை நீண்ட காலமாக வானதி சீனிவாசன் எதிர்பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரது டெல்லி பயணமும் கவனம் பெற்றுள்ளது. தமிழக பாஜகவின் அடுத்தகட்ட மாற்றங்கள் குறித்து அவருடன் கட்சி மேலிடம் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இரு முக்கிய தமிழக பாஜக நிர்வாகிகளும் ஒரே நேரத்தில் டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழக பாஜகவில் புதிய பொறுப்புகள் மற்றும் மத்திய அமைச்சரவை தொடர்பாக முக்கிய முடிவுகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Source link