மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வங்சுக்; சி.ஜே.பி நாடு தழுவிய போராட்டம்

26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்… நாடு முழுவதும் இன்று சிஜேபி பேரணி; தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரிக்கை மீண்டும் வலுத்தது
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக 26 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP) நாடு முழுவதும் இன்று ஒற்றுமைப் பேரணியை நடத்துவதாக அறிவித்துள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் போலீஸ் வன்முறைக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலியுறுத்தவும் இந்தப் பேரணி நடத்தப்படுவதாக கட்சி தெரிவித்துள்ளது. சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்த பிறகு, சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் டிப்கே, தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் அமைதியான போராட்டம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தொடரும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட அபிஜித் டிப்கே, உடல்நலக் குறைவு காரணமாக காய்ச்சலுடன் சிகிச்சை பெற்று, ரத்தப் பரிசோதனை மற்றும் திரவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் போராட்டக் களத்திற்குத் திரும்பியதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சமூக ஆர்வலர் சோனம் வங்சுக், நேற்று (ஜூலை 23) நள்ளிரவில் தனது 26 நாள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்தார். குருகிராமில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சோனம் வங்சுக், “மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக் அபெக்ஸ் பாடி மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்கள் நீடித்த எனது உண்ணாவிரதத்தை முடித்தேன்” என்று தெரிவித்தார்.

அவரது முடிவை வரவேற்ற அபிஜித் டிப்கே, “சோனம் வங்சுக் தனது உயிரையே பணயம் வைத்து நாட்டின் மனசாட்சியை எழுப்பியுள்ளார். அவர் உண்ணாவிரதத்தை முடித்திருப்பது நிம்மதியளிக்கிறது. ஆனால் எங்களின் அமைதிப் போராட்டம், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தொடரும்” என்று பதிவிட்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, சோனம் வாங்சுக்கை சந்தித்த பின்னர், அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தி, பின்னர் அவருக்கு திரவ உணவு வழங்கியதாக தெரிவித்தார். 

மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகளில் கல்விசார் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். அரசின் நிலைப்பாட்டை வங்சுக்கிடம் விளக்கிய ஜே.பி. நட்டா, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் 2026 ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அரசு நேர்மறையான அணுகுமுறையை கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், சமீபத்திய நீட் (NEET) வினாத்தாள் கசிவு தொடர்பாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதையும் அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். சோனம் வங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி விரைவில் உடல் எடையையும் உடல்நலத்தையும் மீட்டெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், “சோனம் ஜி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றும் பதிவிட்டார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் நடைபெறவுள்ள பேரணிக்கான வழிகாட்டுதல்களையும் காக்ரோச் ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. பேரணியில் பங்கேற்கும் மாணவர் அமைப்புகள் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று, ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சண்டிகர், தரம்சாலா, போபால், பாட்னா, குவாஹட்டி, கலபுர்கி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 33 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.



Source link