மத்திய அரசின் வங்கி தனியார் மயமாக்கல் கொள்கைக்கு எதிராக மாநாடு; இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்

மத்திய அரசின் வங்கித் தனியார் மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராகவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும் திருச்சியில் இருநாட்கள் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுனில்குமார், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப்பில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சி, வங்கிகள் இணைப்பு மற்றும் பணியாளர் எண்ணிக்கையை குறைக்கும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தொடர்ந்து போராடி வருகிறது.

தற்போது நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களுக்கு சம்மேளனம் முழு ஆதரவை வழங்குகிறது. மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நலன் மற்றும் வங்கி ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் நமது சம்மேளனத்தின் 14-வது தமிழ் மாநில மாநாடு, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலம் சார்லஸ் மகாலில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டின் வாயிலாக, வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த மற்றும் தற்காலிக பணி நியமன முறைகளைக் கைவிட வேண்டும். வங்கிச் சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநாட்டின் இறுதி நாளில் அடுத்தகட்ட தொடர் போராட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

க.சண்முகவடிவேல்

Source link