மத்திய அரசு திட்டத்தின் பெயரில் மோசடி: சுய விபரங்களை பகிராதீர் என எச்சரிக்கை

சென்னை: ‘பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் பெயரில், இரண்டு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்குவதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி, ‘லிங்க்’குகளை நம்பி, தனிப்பட்ட விபரங்களை பகிர வேண்டாம் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சமீப நாட்களாக, ‘வாட்ஸாப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா – 2026 விண்ணப்பம்’ என்ற பெயரில், போலி இணையதள, ‘லிங்க்’ வேகமாக பரவி வருகிறது. அதில், 13 முதல் 65 வயது வரையிலான இந்திய குடிமக்களுக்கு, 50,000 முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த, ‘லிங்க்’கை திறந்தவுடன், விண்ணப்பதாரரின் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்கப்படுகிறது. தொடர்ந்து, ‘உங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா அல்லது மொபைல் பணப்பரிவர்த்தனை வசதி உள்ளதா’ என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி கூறப்படுகிறது.

அத்துடன், அந்த ‘லிங்க்’கை குறைந்தது 15 பேருக்கும், ஐந்து ‘வாட்ஸாப்’ குழுவிற்கும் பகிர்ந்தால் மட்டுமே, விண்ணப்பம் செல்லுபடியாகும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, போலி தகவல்கள், மிக வேகமாக பரவுவதுடன், மேலும் பலரை அந்த இணையதளத்திற்கு இழுக்கும் முயற்சி நடந்து வருவதாக, சைபர் பாதுபாப்பு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

பொதுவாக அரசு திட்டங்களுக்கான இணையதளத்தில், ‘gov.in’ என்ற அதிகாரப்பூர்வ முகவரி இடம் பெற்றிருப்பது வழக்கம். தற்போது பரவி வரும் போலி, ‘லிங்க்’கில் தனியார் இணையதள முகவரி இடம் பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை நம்பி, ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண், ஓ.டி.பி., உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்தால், நிதி மோசடி மற்றும் அடையாள திருட்டு போன்ற குற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மோசடி நடக்கும் பட்சத்தில், 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

‘பரவும் தகவல் போலியானது’

மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மை கண்டறியும் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டத்தில் வயது அடிப்படையில், நேரடி நிதியுதவி வழங்கப்படுவதாக பரவும் தகவல் போலியானது. இது, மத்திய அரசுடன் தொடர்பில்லாத, ‘லிங்க்’ என்பதால், பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்’ என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Source link