“மத்திய அரசு நாளை வரை அவகாசம் கேட்டுள்ளது”

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், போராட்டங்களையும் தூண்டியுள்ளது. குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினரும், மாணவர்களும் முன்னெடுத்த அமைதி போராட்டமும் அவர்களை வன்முறையால் கையாண்ட காவல் துறையினரின் நடவடிக்கையும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள வி.பி ஹவுஸ்சில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்களான ஜே.பி.நட்டா, ஜிதேந்தர் சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரன்கா ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “கூட்டம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்தது. இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. அவர்களிடம் தேர்வுகளுக்காக 3 முக்கிய கோரிக்கைகளும் 5 சீர்திருத்தப் பரிந்துரைகளும் இருந்தன. நாளை பிற்பகல் மீண்டும் அவர்களைச் சந்தித்து, அரசாங்கத்திற்குள் நாங்கள் நடத்திய கலந்துரையாடல் குறித்துத் தெரிவிப்போம் என்று அவர்களிடம் கூறியுள்ளோம்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கரப்பான்பூச்சி கட்சியின் பிரதிநிதிகள், “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை தொடர்பாக, நாளை மதியம் வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. அவரை விரைவில் பதவியிலிருந்து நீக்குவார்கள் என நம்புகிறோம். தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் சட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை ரீதியான ஒப்புதலைத் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தனர். 

Source link