– நமது சிறப்பு நிருபர் –
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால், நாடு முழுதும் போராட்டம் நடந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.
மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு வினாத்தாள் இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் கசிந்ததால், மாணவர்கள், பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ‘நீட்’ மறுதேர்வு நடத்தப்பட்டு சமீபத்தில் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
எனினும், ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வருங்காலங்களில் வினாத்தாள் கசிவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
ஒரு கட்டத்தில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அபிஜித் தீப்கே, மாணவர்களின் எதிர்காலத்திற்காக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் பணியாற்றி வந்த அபிஜித் தீப்கே, இதற்காக நாடு திரும்பி கடந்த ஜூன் 20ம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினார்.
லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 20 நாட்களாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், போலீசார் போராட்டப் பந்தலில் இருந்து அவரை குண்டுகட்டாக துாக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின், கடந்த 20ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவர்களும் ஒன்று திரண்டு பார்லி.,யை மு ற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்த நிலையில், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதனால் பார்லி., முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்தது. மறுநாள், மாணவர்கள் மீதான தடியடி மற்றும் போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் குரல் எழுப்பினர்.
இதனால், இந்த விவகாரம் நாடு முழுதும் விஸ்வரூபம் எடுத்தது. போராட்டத்தின் தொடக்கத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வலியுறுத்தினர்.
பின்னர், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்த மாணவர் களின் குடும்பத்தாருக்கு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியக் கூடாது என நிபந்தனைகள் விதித்தனர்.
நாளுக்கு நாள், போராட்டம் வலுவாக பரவியதால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் இருவரும் பேச்சு நடத்தினர்.
அப்போதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்; அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் திடீரென ராஜினாமா செய்தார்.
இது குறித்து தன் சமூகவலைதளப் பக்கத்தில் அவர் கூறியதாவது:
‘நீட்’ வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த முதல் நாளில் இருந்தே, இந்த விவகாரத்திற்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஒருபோதும் என் பொறுப்பில் இருந்து நான் பின்வாங்கியது இல்லை. தகுதி வாய்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை தேர்வு மாபியாக்கள் சீரழித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வு என்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இளைஞர்கள் சக்தியே நம் நாட்டின் உண்மையான சக்தி. சமூக விரோதிகளின் சதி வலையில் இளைஞர்கள் சிக்கி விடக் கூடாது என்பதற்காகவே பதவியை ராஜினாமா செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இளைஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘நாடு முழுதும் நடந்த போராட்டங்களை தேசவிரோத சக்திகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், மாணவர்களின் எதிர்காலம் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன். இது சுயமாக எடுத்த முடிவு’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்து இருப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
புதிய கல்வி அமைச்சர் நியமனம்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
