மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

– டில்லி சிறப்பு நிருபர் –

‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாத தமிழகம் உட்பட ஐந்து மாநில தலைமை செயலர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது?’ என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

டாக்டர் பல்ராம் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை, டில்லி, மும்பை, கொல்கட்டா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஆறு பெருநகரங்களில், சாக்கடை மற்றும் மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இயந்திரப் பயன்பாட்டை உறுதிப்படுத்தவும் விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

அப்படி இருந்தும், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தாது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நாட்டின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது மனித உயிர்கள் இன்றும் பறிபோகின்றன. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக உத்தரவிட்ட பிறகும், இன்றும் உயிரிழப்புகள் தொடர்வது ஏன்?

கடந்த 2024-ல் 54 பேரும், 2025-ல் 46 பேரும் கழிவுநீர் தொட்டிகளில் இறந்து போனது எப்படி? இந்த மனித உரிமை மீறலுக்கு எங்காவது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டாமா?

நீதிமன்ற உத்தரவுகளை முறையாக செயல்படுத்தத் தவறிய தமிழகம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் டில்லி ஆகிய ஐந்து மாநிலங்களின் செயல்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை.

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஐந்து மாநிலங்களின் தலைமை செயலர்களையும் நேரில் ஆஜராக அழைக்க நேரிடும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Source link