பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தனது 84 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ‘கல்கி 2898 ஏடி’, ‘செக்ஷன் 84’ மற்றும் ‘ஆங்கேன் 2’ படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே பிரபல நிகழ்ச்சியான ‘க்ரோர்பதி’-யையும் தொகுத்து வருகிறார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் அவர் தற்போது அதிலிருந்து சிறிது நாட்கள் விலகியிருக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மன்னிக்கவும்… சிறிது காலம் ஓய்வெடுத்து உடல்நலத்தில் கவனம் செலுத்த எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் சில நாட்களுக்கு என்னால் எதையும் எழுத முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கின்றனர். அதே சமயம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லியுள்ள அவர் அதற்கு என்ன காரணம்? உடல்நலத்தில் ஏதேனும் தீவிரமான பிரச்சனையா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காததால் அவரது உடல்நலம் குறித்து ரசிகர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அவர் பூரண குணமடைந்து பழையபடி மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
