மறுவாழ்வு பெறும் கூவம் ஆற்றங்கரை: நடை பாதை, மிதிவண்டிப் பாதைகளுடன் புதிய வடிவமைப்புக்கு டெண்டர்

நீண்டகாலமாக ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பு மற்றும் மாசுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள கூவம் ஆற்றினைச் சீரமைத்து, அதன் கரைகளை அழகுபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இதன் பகுதியாக நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறான வசதிகளுடன் கூவம் ஆற்றங்கரையை மேம்படுத்த 3 முக்கிய இடங்களில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஆலோசனைக் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders) கோரப்பட்டுள்ளன.

திட்டம் மேற்கொள்ளப்படும் இடங்கள் (மொத்தம் 3.7 கி.மீ):

  • நேப்பியர் பாலம் முதல் கூவம் முகத்துவாரம் வரை: 0.5 கி.மீ
  • சுவாமி சிவானந்தா சாலை முதல் பெரியார் பாலம் வரை: 1.2 கி.மீ
  • இணைப்புச் சாலை முதல் டாம்ஸ் சாலை வரை: 2 கி.மீ

தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஆற்றின் நீரோட்டம், வெள்ள அபாயம், ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலக்கும் இடங்கள், மண்ணின் தாங்கும் திறன் மற்றும் நிலவும் கட்டமைப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்.

ஆற்றங்கரை பாதுகாப்பு கட்டமைப்புகள், நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும்.

ஆற்றில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் தேவையான தீர்வுகள் பரிந்துரைக்கப்படும்.

டெண்டர் தொடர்பான விவரங்கள்:

சென்னை நதிகள் சீரமைப்பு நிறுவனம் சார்பில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் முதல் 21 நாட்களுக்குள் வரைவு அறிக்கை, பொறியியல் வடிவமைப்பு, மற்றும் செலவு மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அடுத்த 9 நாட்களுக்குள் இறுதி அறிக்கை, அளவுப் பட்டியல் மற்றும் செயலாக்கத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.23,000 ஆகும்.

தகுதி விவரங்கள்:

கடந்த 7 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்த அனுபவம் இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்களைப் பெறும் நிறுவனங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

இந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை https://tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தப்புள்ளிகளை நவம்பர் 3-ஆம் தேதி காலை 11 மணி வரை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம் என்றும், அன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் .

இத்திட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி வடிவமைப்பு, செலவு மதிப்பீடு மற்றும் செயலாக்க வழிமுறைகள் முடிவு செய்யப்பட்டு, அடுத்தகட்டப் பணிகள் விரைவாகத் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link