தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர்.
மாஜி எம்எல்ஏ-க்களுக்கே மீண்டும் வாய்ப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் C. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இந்தச் சூழலில், ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கே மீண்டும் அந்தத் தொகுதிகளில் போட்டியிட தமிழக வெற்றிக் கழக தலைமை சீட்டு வழங்கியுள்ளது.
மாவட்ட நிர்வாகிகளுக்கு கொக்கிப் போடும் C. விஜயபாஸ்கர்
தவெக சார்பில் மீண்டும் மாஜி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பளித்தது அதிமுக தலைமை மீதும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏ-க்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அவர்களது அரசியல் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் என்பதை, இந்த அறிவிப்பு மூலம் தமிழக வெற்றிக் கழக தலைமை மறைமுகமாக உணர்த்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், அந்த அறிவிப்பின்படி தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் C. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணத்தை மட்டும் நோக்கமாக கொண்ட இபிஎஸ்
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களைச் சுட்டிக்காட்டி விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம். எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி முக்கியமல்ல, அவருக்குப் பணம் தான் முக்கியம், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அனைவரிடமும் கேட்ட முதல் கேள்வியே, “தேர்தலுக்கு இவ்வளவு செலவு ஆகும், உங்களிடம் அவ்வளவு பணம் உள்ளதா?” எனக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளாராம். மேலும், இனி எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக மீண்டெழ துளியும் வாய்ப்பில்லை எனவும் சொல்லியுள்ளாராம்.
தீர்ப்பிற்காக காத்திருக்கும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள்
முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏ-க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.டி. பிரபாகரன் ஏற்றுக்கொண்டார். ஆனால், அவர்களது ராஜினாமாவை நிராகரித்து, கட்சி தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதை எதிர்த்து கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து அதிருப்தி எம்எல்ஏ-க்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அதிமுகவின் தற்போதைய எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை நிலைக்குமா என்பது தெரியவரும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
