பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று (20.07.2026) தொடங்கியது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தலைமையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று (21.07.2026) சந்தித்து பேசினர். அப்போது “நியாயமான கேள்விகளைக் கேட்டதற்காக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்” என்று கூறிய ராகுல் காந்தி, நீட் தேர்வு கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனையடுத்து ராகுல் காந்தி செய்தியாளார்களுக்கு அளித்த பேட்டியில், “நேற்று நடந்த சம்பவத்திற்காக பிரதமர் மோடி மன்னிப்புக் கூட கேட்கவில்லை. கல்வி மற்றும் தேர்வு முறைக்கு எதிராக இளைஞர்கள் போராடி வருகின்றனர். கல்வி மற்றும் தேர்வு முறையை கறையான்கள் அரித்து ஓட்டையாக்கியுள்ளன என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும். பிரதமர் மோடி ஏன் மௌனமாக இருக்கிறார்? அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும். முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த நாட்டின் இளைஞர்களை இப்படி நடத்தப் படக் கூடாது. இந்த நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்புகள் இல்லை; அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளன; போட்டித் தேர்வுகளுக்கான ஒரே ஒரு கதவு மட்டுமே திறந்திருந்தது, அதுவும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது.
இங்குள்ள மாணவர்கள் கல்வி முறையைப் பற்றி மட்டுமல்ல, தங்களின் எதிர்காலத்தைப் பற்றியும் முறையிடுகின்றனர். அம்பானி மற்றும் அதானி, ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பால் கல்வி முறை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் முறையிடுகிறார்கள். இது இளைஞர்களின் எதிர்காலம் பற்றியது. அம்பானியின் திருமணத்தையும், அங்கு 1000 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள், ஆனால் தங்களுக்கு சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க அவர்களிடம் பணம் இல்லை. இது கல்வியை விட மிகப் பெரிய விஷயம். இது இந்தியாவின் இளைஞர்கள் தங்களுக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை என்று கூறுவதாகும். இது நியாயமானது. தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.
நான் காயமடைந்த மாணவர்களைச் சந்திக்கச் செல்கிறேன்.” என்று கூறினார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற சி.ஜே.பி. போராட்டப் பேரணியின் போது போலீஸ் நடத்திய தடியடியில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஆர்எம்எல் மருத்துவமனைக்கு நேரில் சென்று ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் எம்பிக்கள் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
