நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்றனர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் தான் டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அன்பான மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும், உங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். டெல்லி, ஜந்தர் மந்தரில் சட்டவிரோதமாகக் கூடுவது அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஆகியவை இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி கடுமையாக முறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்குக் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துவதுடன், அவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகளையும் கணிசமாகப் பாதிக்கலாம். எனவே, மாணவர்கள் அனைவரும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். மேலும், சூழ்நிலையை மோசமாக்குவதற்காக அதிகளவில் போலி மற்றும் தவறான தகவல்கள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதால், நீங்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக மாணவர்களை மிரட்ட உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது?. காலம் வரும்போது நீங்கள் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
