மாணிக்கம் தாகூருக்கு முக்கியத்துவம் வழங்கும் விஜய்? கொஞ்ச நாளைக்கு இதை செய்யாதீங்க.. தவெகவினருக்கு பறந்த உத்தரவு – vijay gives key role to manickam tagore at september 9 alliance parties meeting

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இடதுசாரிகள், முஸ்லிம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டும் ஆட்சிக்கு வெளியில் இருந்துஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிகிறது. குறிப்பாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் Floor Test-ல் ஆதரவு அளிப்போம் என்றும், ஆனால் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் இடதுசாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அரசை தொடர்ந்து விமர்சிக்கும் இடதுசாரிகள்

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும், அரசின் பல்வேறு செயல்பாடுகளை இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால், கூட்டணிக்குள் இடதுசாரிகளின் நிலைப்பாடு குறித்து தொடர்ந்து விவாதம் நிலவி வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியிலும் தவெக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் தவெக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவித்து வருவது காங்கிரஸ் கட்சிக்குள் கவனத்தை பெற்றுள்ளது.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் காங்கிரஸுக்கு, விஜய்யின் பிரதமர் வேட்பாளர் பேச்சு அரசியல் ரீதியாக சவாலாக அமையுமா என்ற கேள்வியும் கூட்டணிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் வேட்பாளர் பேச்சுக்கு தற்காலிக கட்டுப்பாடு?

இந்த சூழலில், இடதுசாரிகள் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து தொடர்ந்து பேசி வரும் நிலையில், விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் கருத்துகளை தற்போதைக்கு பொதுவெளியில் பேச வேண்டாம் என தவெக தரப்பில் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தவெக ஆட்சி நீடிக்காது என விமர்சித்து வரும் நிலையில், கூட்டணிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஆட்சியின் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடாது என்பதில் தவெக தலைமை கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

செப்.9 கூட்டத்தில் என்ன முடிவு?

இந்த அரசியல் சூழலில்தான் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, அதற்கு பெயர் வைப்பது மற்றும் ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூரை நியமிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, கூட்டணி வலுவாகவும் ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும் என மாணிக்கம் தாக்கூர் ஏற்கனவே வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியை நிலைநிறுத்த தவெக முயற்சி

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஒருபுறம் தொடரும் நிலையில், கூட்டணிக்குள் இருக்கும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் அதிருப்தியையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

திமுக ஆட்சி பற்றி ஆதவ் பேச்சு… தெறிக்க விட்ட தொண்டர்கள்!

அடுத்த இடைத்தேர்தல் வரை கூட்டணியின் ஆதரவை உறுதி செய்து, கூட்டணிக்குள் நிலவும் சலசலப்புகளை கட்டுப்படுத்தி, நிலையான ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சியாகவே செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டம் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டணியில் இடதுசாரிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும், விஜய்யின் பிரதமர் வேட்பாளர் விவகாரம் எந்த திசையில் செல்லும் என்பதும் அரசியல் களத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link