மாலியில் ரூ.44 கோடி கொடுத்து வைர வியாபாரி மீட்பு

பமாக்கோ:மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 75 வயதான வைர வியாபாரியை, மூன்று மாதத்திற்கு பின், 44 கோடி ரூபாய் அளித்து அவரது குடும்பத்தினர் மீட்டனர்.

குஜராத்தின் தார் பகுதியைச் சேர்ந்த ரமணி, 1980களில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்பின் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். சர்வதேச வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவர், மாலி தலைநகர் பமாக்கோவில் உள்ள தங்க சுரங்கத்தை சமீபத்தில் வாங்கினார். இதையடுத்து, கடந்த ஏப்ரலில் அங்கு தங்கியிருந்தபோது, அங்குள்ள உள்ளூர் கடத்தல் கும்பல் ரமணியை கடத்தி சென்றது.

இதைத்தொடர்ந்து, அவரை விடுவிக்க வேண்டும் எனில், 100 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன் கடத்தல் கும்பலிடம் ரமணியை விடுவிக்க அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ரமணியை விடுவிக்க, 44 கோடி ரூபாய் அளிக்க அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதால் சமீபத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், தொடர்ந்து மாலி நாட்டிலேயே தங்க வைத்திருப்பதாகவும், அந்நாட்டு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link