மாவட்ட ஆட்சியர் சென்ற சிறிது நேரத்தில் மாநகர்மன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் மற்றும் தவெக நிர்வாகிகளுடன் வந்த அமைச்சர் முகமது பர்வேஸின் அண்ணன் முகமது இப்ராகிம் தூய்மைப் பணியாளர்கள் கொடுத்திருந்த மனுக்களை வாங்கிப் பார்த்து மாநகராட்சி ஆணையர் காந்திராஜிடம் மனுக்கள் பற்றியும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அமைச்சர் முகமது பர்வேஸின் அண்ணன் முகமது இப்ராகிம் அரசு நிகழ்ச்சியில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ‘மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநகராட்சி ஆணையர் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை மகாராஜா மஹாலில் நடைபெற்ற மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து விதமான பணியாளர்களுக்கும் அரசு சலுகைகள் சேரும் வண்ணம் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட பொழுது..!’ என்று பதிவுகளும் வெளியிட்டுள்ளனர்.
அரசு பள்ளிகள், அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்யக் கூடாது, ஆய்வு செய்து ரீல்ஸ் வெளியிடக் கூடாது. அப்படி யாரேனும் ஆய்வு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் தவெக தலைமை அறிவித்தது. ஆனால் இங்கே அமைச்சர் முகமது பர்வேஸ் ஊரில் இல்லை என்பதால் அவரது அறிவுறுத்தலின் பேரில் எந்தப் பதவியும் இல்லாத அவரது அண்ணன் முகமது இப்ராகிம் அரசு நிகழ்ச்சியை ஆய்வு செய்து மனுக்களை வாங்கிப் பார்த்து மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு அதனை தன்னுடன் வந்த ரீல்ஸ் கும்பலை வைத்து வீடியோ, படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
வெக தலைமை அமைச்சர் மீதும், அவரது அண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா? இல்லை சம்மந்தமே இல்லாத விளக்கம் சொல்லி மூடி மறைப்பார்களா? என்று முகாமில் பணியாற்றிய அதிகாரிகளே கேள்வி எழுப்பி உள்ளனர்.
