தேர்தல் காலங்களில் மதுவின் சமூகத் தீமைகளைக் குறைப்போம், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம், மக்களின் நலனே அரசின் முன்னுரிமை என்று உறுதியளித்த த.வெ.க. இன்று ஆட்சிக்கு வந்ததும் மதுபான விற்பனையை மேலும் எளிதாக்கும் வகையில் புதிய குடிப்பகங்களை அமைக்க வழிவகுப்பது அதன் வாக்குறுதிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஒரு சில ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்தை உடைத்து, டெண்டர் முறையில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என்பதே இந்த முடிவின் நோக்கம் என அரசு கூறுகிறது. ஆனால், அரசின் பொறுப்பு ஒப்பந்ததாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல; மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான்.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் ரூ.150 கோடி வருவாய் ஈட்டுவதாக அரசு பெருமையுடன் கூறுகிறது. ஆனால் அந்த வருவாய்க்குப் பின்னால் எண்ணற்ற குடும்பங்களின் கண்ணீர், பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறை, இளைஞர்களின் வாழ்க்கைச் சீரழிவு, சாலை விபத்துகள், உடல்நலப் பாதிப்புகள் மற்றும் சமூக அமைதிக்கே ஏற்படும் சேதம் மறைக்கப்பட்டுள்ளது. அரசின் வெற்றி வருவாய் அதிகரிப்பால் அளவிடப்படக் கூடாது; சமூகத் தீமைகள் குறைவதால் அளவிடப்பட வேண்டும். மேலும், குடிப்பகங்கள் அமைப்பதற்கான குறைந்தபட்ச பரப்பளவை 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தியிருப்பது போதுமானதல்ல என்று அங்கு பணிபுரிபவர்களே சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவசர நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத நிலை தொடரும் என்ற எச்சரிக்கையையும் அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. மக்களின் உடல்நலம், பெண்களின் பாதுகாப்பு, குடும்பங்களின் நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய அரசு, மதுபான விற்பனையை விரிவுபடுத்தும் கொள்கைகளை முன்னெடுப்பது சமூகப் பொறுப்பிற்கு ஏற்புடையதல்ல. எனவே, டாஸ்மாக் குடிப்பகங்களை 100 மீட்டர் சுற்றளவிற்குள் அமைக்க அனுமதிக்கும் இந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அதற்குப் பதிலாக, மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கும் நீண்டகாலத் திட்டம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, மறுவாழ்வு மையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் சமூக நலக் கொள்கைகள் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
