நமது நிருபர்
தென்காசியில் புதிய வீட்டு மின் இணைப்பிற்கு ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வயர்மேன் ஆறுமுகசாமி, 53, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், புன்னையாபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், 37, வயரிங் காண்ட்ராக்டர். இவர், தென்காசி மேட்டுத்தெருவைச் சேர்ந்த நாகராஜனின் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருந்தார். இதற்கான கட்டணமாக ரூ.13,725 மற்றும் ரூ.27,660 ஆகிய தொகைகளை ஆன்லைனில் செலுத்தியதையடுத்து, மின் கம்பம் நடும் பணி உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து, மின் மீட்டர் பொருத்துவதற்கு தென்காசி மின்வாரிய அலுவலக வயர்மேன் ஆறுமுகச்சாமி 53, ரூ.2,000 லஞ்சம் கேட்டார். பணம் கொடுத்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகசுந்தரம், தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனப் பொடி தடவிய ரூ.2,000-ஐ புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். திட்டமிட்டபடி வயர்மேன் ஆறுமுகச்சாமி லஞ்சப் பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
