தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழப் போகிறது என்ற தகவல் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அதிரடி நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் விஜய் தயாராவார் என்கின்றனர். இதன் பின்னணி பற்றி விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றை திருத்தி எழுதியிருந்தது. கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த தவெக என்ற பெருமையை, இதுவரை எந்த கட்சியும் பெறவில்லை. அதேசமயம் 118 மேஜிக் நம்பர் கிடைக்காமல் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். இருப்பினும் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவால் ஆட்சி அமைத்தனர்.
5 ஆண்டுகள் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் திரைமறைவில் சில ஆபரேஷன்களையும் செய்திருப்பதாக கூறுகின்றனர். இதன் விளைவாகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா, இடைத்தேர்தலுக்கு தயாராகும் தொகுதிகள் என்ற செய்தி வெளியானது. இதற்கிடையில் இளம் அமைச்சரவையை உருவாக்கி, ஆட்சி நிர்வாகத்தை முதலமைச்சர் விஜய் கவனிக்க தொடங்கினார்.
தவெக அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன்
மொத்தம் 35 பேர் கொண்ட அமைச்சரவையில் செங்கோட்டையன் மட்டுமே அனுபவம் வாய்ந்தவராக திகழ்கிறார். மற்ற அனைவருமே புதியவர்கள். இருப்பினும் அதிகாரிகள் உதவியுடன் தங்கள் துறையை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல ஆர்வம் காட்டுவதை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதிலளிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கிடையில் பேச்சிலும், செயல்பாடுகளிலும் அமைச்சர்கள் பலர் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இவர்களால் தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் சங்கடம் ஏற்பட்டு வருகிறது.
2 ஆண்டுகள் – முதலமைச்சர் விஜய் அரசியல் கணக்கு
தவெக அமைச்சரவை அமையும் போது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வதையே முதலமைச்சர் விஜய் விரும்பினார். அதன்பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பலரது திறன்களை மெருகேற்றவும், கட்சியை இரண்டாம் கட்ட அளவில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் தொடர் சர்ச்சைகளால் அமைச்சரவை மாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ரெட் லிஸ்டில் அமைச்சர் சரத் குமார்?
தற்போது இதுதொடர்பாக மூத்த அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடைபெற்று வரும் சூழலில், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர், முதலமைச்சரின் தொழில் சார் முதலீடுகளை ஈர்க்கும் வெளிநாட்டு பயணம் ஆகியவை முடிந்த பின்னர் அதிரடி மாற்ற உத்தரவுகள் வெளியாகும் என்கின்றனர். இந்த லிஸ்டில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பவுடர் வீடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் சரத்குமார் அமைச்சரவையில் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். பொதுவெளியில் தனது முரண்பாடான பேச்சுகளால் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் வேறு துறைக்கு மாற்றப்பட உள்ளாராம்.
தவெக அமைச்சரவையில் நிகழும் மாற்றங்கள்
சரியான புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் இன்றி முரண்பாடுகளை சந்தித்து வரும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மாற்றப்படுவதாக கூறுகின்றனர். இதையடுத்து கனிம வளத்துறை அமைச்சர் பிரபு, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோரது துறைகளும் மாற்றப்படும் என்கின்றனர். கூட்டணி கட்சியான காங்கிரஸின் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டிருந்த உயர்கல்வித்துறை வேறொருவர் கைக்கு போகும் எனத் தெரிகிறது. இவ்வாறு லிஸ்டு நீண்டு கொண்டே போகிறது.
எதிர்க்கட்சிகள் கவுன்ட்டர் – முதலமைச்சர் விஜய்க்கு சவால்
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நிர்வாகத்தை சரியான முறையில் கொண்டு செல்ல முதலமைச்சர் விஜய் விரும்பினாலும், இந்த மாற்றங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக மாறக்கூடும். ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரையும் குறிப்பிட்டு, இவரது மாற்றத்தின் பின்னணி தெரியுமா? எனக் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் மத்தியில் அடுக்கக்கூடும்.
அடுத்து வரவுள்ள இடைத்தேர்தல் பரப்புரை களத்திலும் இந்த விவகாரம் எதிரொலிக்கும். இதற்கு முதலமைச்சர் விஜய் எப்படி கவுன்ட்டர் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
