ஜகார்த்தா: குஜராத்தில், 2024ல் மீட்கப்பட்ட ஒராங்குட்டான் வகை குரங்கு குட்டியை, இந்தோனேஷியாவிடம் இந்தியா நேற்று ஒப்படைத்தது.
ஒராங்குட்டான், தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேஷியாவில் அடர்ந்த காடுகளில் காணப்படும் அரியவகை குரங்கு வகையாகும். அங்கேயே அழிந்து வரும் இனமாக உள்ளது.
கடந்த, 2024ல் கடத்தி வரப்பட்ட ஒராங்குட்டான் குட்டி ஒன்று, குஜராத்தில் மீட்கப்பட்டது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஒராங்குட்டான் குட்டி, இந்தோனேஷிய அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள இந்தியத் துாதரக அதிகாரிகள், இந்தோனேஷிய வனத்துறை அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தனர்.
இரு நாட்டுக்கும் இடையேயான நல்லுறவின் அடிப்படையில், அதன் மருத்துவ, பராமரிப்பு மற்றும் பயணத்துக்கான செலவுகளை மத்திய அரசே ஏற்றுள்ளது.
கடந்த, செப்., மாதம், ஒடிஷாவின் வனப்பகுதியில், ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள் மீட்கப்பட்டன. தற்போது அவை, புவனேஸ்வரில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வரும், நவ.,ல் இந்தோனேஷிய அதிகாரிகள் இந்தியா வந்து, அவற்றை பார்வையிட உள்ளனர். அதன்பின், அவற்றை ஒப்படைக்கும் நடவடிக்கை துவங்கும் என, கூறப்படுகிறது.
