‘டேர் டெவில்’ படத்தின் பூஜை அடுத்த மாதம் 2-ந்தேதி எளிமையான முறையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை அடுத்த மாதம் 2-ம் தேதி எளிமையான முறையில் நடத்த திட்டமிடப்பட்டது.
தீபாவளி பண்டிகை
ஆரம்பத்தில் அதே நாளில் படப்பிடிப்பைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த மாதம் 13 அல்லது 16-ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு முறைப்படி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக, அஜித் குமார் மற்றும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் பங்குபெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், தனது ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
