”மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு”; கே.என்.நேரு வீட்டின் முன் குவிந்த தி.மு.க.வினர்!

திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி, தில்லை நகரில் உள்ள இல்லத்தில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இன்று காலை 3 பொலிரோ  வாகனங்களில் வருகை தந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர், தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர சோதனையைத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு கருதி வீட்டின் நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்து, சுமார் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான வழக்கு விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.   

வரும் 16-ஆம் தேதி கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்த திடீர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருமண சுபநிகழ்ச்சி நெருங்கும் வேளையில் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

 கே என் நேருவின் வீட்டில் தொடர்ந்து ஆவணங்கள் மற்றும் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில், சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய 19 இடங்களில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லைநகரில் சோதனை நடைபெறும் தகவல் அறிந்து திமுகவினர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டின் முன்பு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமான திமுகவினர் குவிந்துள்ளனர்.  

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி முடிந்து திருச்சி கிழக்கு உள்பட ஐந்து  தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த தேர்தல்களில் திமுகவினரை முற்றிலும் ஒடுக்க தவெக அரசு தீவிர ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.