முடிவுக்கு வருகிறது லோக்சபா முடக்கம்: பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மீது நாளை விவாதம்

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக லோக்சபா தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா முயற்சி காரணமாக பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மீது நாளை( ஜூலை 28) விவாதம் நடைபெறும் என தெரிகிறது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்தினர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 20ம் தேதி பார்லிமென்ட்டை நோக்கி அந்த அமைப்பினரும், மாணவர்களும் பேரணியாக சென்றனர். கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீசார் பதிலுக்கு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை பார்லிமென்ட்டை நடத்த விட மாட்டோம் என பிடிவாதம் பிடித்தன. இதனால் கூட்டம் துவங்கிய முதல் ஐந்து நாட்கள் பார்லிமென்டின் இரு அவைகளும் முடங்கின. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

இருப்பினும், மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இன்றும்(ஜூலை 27) அவை ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும் அமளிக்கு இடையே அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா லோக்சபாவில் இன்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், இந்த மசோதா மீது நாளை விவாதம் நடக்கும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா மீது நாளை விவாதம் நடக்கும். சபாநாயகர் ஓம்பிர்லாவின் முயற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை காரணமாக, அனைத்து கட்சித் தலைவர்களும் இந்த மசோதா மீது விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link