முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்.

திமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

முதலமைச்சர் விஜய்

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link