'முதலை கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்'

‘தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதலைக் கண்ணீர் வடிக்கிறார்’ என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் நிர்வாக திறமையின்மை, மெத்தனப்போக்கினால், தமிழகத்திற்கான உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை, அகில இந்திய ஒதுக் கீட்டிற்கு தாராளமாக தாரை வார்த்தனர்.

தற்போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்கள் செல்வாக்கையும் இழந்து, தவறான தகவல்கள், பொய்கள் அடிப்படையில், முதலை கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் அனைத்தும், எவ்வித நிபந்தனையும் இன்றி, அகில இந்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டன. மத்திய அரசு, ‘கட்ஆப்’ மதிப்பெண் குறைத்து, அவ்விடங்களில் சேர்க்கை நடத்தியது.

அதன்படி, 2024ல் 119 இடங்களும், 2025ல் 145 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்றது மறுக்க முடியாத வரலாறு. இதனால், தமிழக டாக்டர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனது.

இந்தாண்டு, 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தாலும், முந்தைய ஆட்சி போல் ஒப்படைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சட்ட பேராட்டத்தை நடத்தினோம்.

அதில், மாநில கலந்தாய்வில் இருக்கும், ‘கட்ஆப்’ மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

அவ்வாறு நிரம்பாத இடங்களில், ‘கட்ஆப்’ மதிப்பெண் குறைத்து சேர்க்கை நடத்தினால், அந்த இடங்களில், 50 சதவீதம் மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, தமிழக டாக்டர்களுக்கு வாய்ப்பை பெற்றுள்ளோம். தமிழக டாக்டர்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைத்த தி.மு.க., இனி மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link