சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக திமுக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் வெளியேறி விட்டன. நீண்ட காலமாக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் தற்போது தவெகவுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணி உடைந்ததற்கு அந்த கட்சியே காரணம் என விசிகவின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
திருமாவளவன் பேச்சு
தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் விசிகவின் தலைவர் திருமாவளவன் இன்றைய தினம் பங்கேற்று பேசினார். அவர் இந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. திருமாவளவன் பேசுகையில், தவெகவுக்கு முதலில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு அளித்தன. அதன்பின்னர் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு எடுத்தது. வெளியில் இருந்து ஆதரவு, அமைச்சரவையில் என்று அறிவித்தேன்.
பதவி ஆசை
பதவி ஆசை திருமாவளவனுக்கு இருந்திருந்தால் காங்கிரஸ் போன போதே, நான் போயிருக்க முடியாதா? பதவி ஆசை இருந்திருந்தால், இடதுசாரிகள் அறிவித்த போதே சேர்ந்து உட்கார்ந்து அறிவித்து இருக்க முடியாதா? பதவி ஆசை இருந்திருந்தால் விஜய் அவர்களே தொடர்பு கொண்டு தொலைப்பேசியில் பேசிய போது, உடனே நாம் இசைவு தந்திருக்க முடியாதா என கேள்விகளை அடுக்கினார் திருமாவளவன். அதோடு நீங்களே வாருங்கள். அமைச்சர் ஆகுங்கள் என்று வெளிப்படையாக கேட்டார்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
அதனை நாம் ஏற்றுக்கொண்டிருக்க முடியாதா? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நீங்களே நில்லுங்கள் என்று வெளிப்படையாக சொன்ன போது, சரி என்று இசைவு தந்திருக்க முடியாதா? இடைத்தேர்தலில் நிற்க மாட்டேன். அமைச்சர் பொறுப்பினை ஏற்க மாட்டேன் என்று துவக்கத்தில் இருந்தே மறுதலித்தவன் திருமாவளவன் என பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு தொடர்பாக இணையத்தில் பல விதமான கேள்விகள் எழுந்துள்ளன.
அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சு தொடர்பாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அதாவது திருமாவளவனின் பேச்சினை குறிப்பிட்டு வேலுமணி அவர்கள் போன் செய்து முதல்வர் ஆகிறீர்களா என்று கேட்டதும் உடனே சரி என்று சொன்னதோடு, தவெக ஆட்சிக்கு ஆதரவு தராமல் இறுதி நிமிடம் வரை தாமதித்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதனையடுத்து அவருடைய இந்த பதிவிற்கு கீழ் ஏராளமான கமெண்ட்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
CM தீர்மானத்தை வரவேற்ற VCK vanniyarasu
நிபந்தனையற்ற ஆதரவு
முன்னதாக தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரிய சமயத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து விசிகவின் முடிவினை அறிவிப்பதாக தெரிவித்தார் திருமாவளவன். ஆனால் சிபிஎம், சிபிஐ கட்சிகள் தவெக ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய நிலையில், விசிகவின் நிலைப்பாட்டினை அறிவிக்காமல் இருந்தார் திருமாவளவன். அதன்பின்னர் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும், அமைச்சரவையிலும் பங்கெடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.
நிலைப்பாட்டில் மாற்றம்
அந்த நிலைப்பாடும் மாறி தவெகவின் அமைச்சரவையில் விசிக பங்கெடுத்தது. இப்படியான நிலையில்தான் தவெக ஆட்சிக்கு ஆதரவு தராமல் இறுதி நிமிடம் வரை தாமதித்தது ஏன்? என்று சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குவதற்கு எஸ்.பி. வேலுமணி போனில் பேசியதாகவும் அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
