விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று (29-10-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொருளாதார நிபுணர் கலையரசன் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமை. அவரை கைது செய்திருப்பதற்கு காவல்துறை சொல்லியிருக்கிற காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறாக எழுதியது என்று சொல்லப்பட்டது.
ஆனால் அது ஒரு போலி ஐடி என்று தெரிய வந்திருக்கிறது. அவருடைய படத்தை பயன்படுத்தி யாரோ அதை செய்திருக்கிறார்கள். அந்த உண்மை தெரிந்த பிறகு காவல்துறை அவரை விடுவித்திருப்பதாகவும் தெரியவருகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல. ஜனநாயக சக்திகளை காயப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.
அவரை 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று யாரும் உத்தரவு போட்டிருக்க வாய்ப்பில்லை. முதல்வர் 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று சொல்லிருக்க மாட்டார். கும்பல் கூடாது என்பதற்காக காவல் துறை தான் அதை முடிவு செய்து கைது செய்திருக்கலாம். ஆனால் அது ஏற்புடையது அல்ல. அதை நாங்கள் கண்டிக்கிறோம். விசாரணை நடந்து கொண்டிருக்கிற சூழலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை கைது செய்திருக்கிறார்கள். முன் ஜாமீன் தள்ளுபடி ஆனதால் விசாரணைக்காக கைது செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். எனவே விசாரணை முடியட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
