இத்தகைய சூழலில் தான், கடந்த 17ஆம் தேதி மாலை அருணாச்சலம் உடலில், தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரியிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று (23.07.2026) காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இன்றைய பொய்க்கால் குதிரை அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது. மடப்புரம் அஜித்குமார் மரணத்தின் போது “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று பதாகை பிடித்த இன்றைய முதலமைச்சர், தனது ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில், நீதி வைத்துள்ளார்?. அருணாச்சலம் மரணத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு யார் இழைத்திருந்தாலும், எந்த பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
