“முதல்வர் விஜய் குரல் எழுப்ப வேண்டும்” – மு.வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள், இடதுசாரி மாணவர்கள் அமைப்புகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (23-10-26) சென்னையில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு தினங்களாக ஜனநாயக முறைப்படி போராடி வருகின்றார்கள். டெல்லி டெல்லியில் போராடுகிற மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒருமைப்பாட்டை தெரிவிக்கிற அதே நேரத்தில் தமிழகத்தின் குரலாகவும் தொடர்ந்து இடதுசாரி மாணவர், இளைஞர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாடு முழுதும் நடைபெறுகிற இந்த ஜனநாயக போராட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உடனடியாக தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 

தமிழக முதல்வர் விஜய், 13 கோடி மக்களின் வாக்கை பறித்திருக்கிற தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று குரல் எழுப்ப வேண்டும். நாடு முழுவதும் இருக்கிற ஜனநாயக சக்திகள், இடதுசாரி சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அநீதிக்கு எதிராக போர் குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்று இடதுசாரி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறைகூவி அழைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த போர் தொடர வேண்டும். இது நாட்டின் அன்றாட இயல்பு வாழ்வை பாதிக்கிற போராட்டம் அல்ல, சட்டம் ஒழுங்கை சீர்குழைக்கிற போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சி முறையையும் பாதுகாக்கிற போராட்டம் இந்த போராட்டம். 

வாக்குரிமையை பரித்ததன் மூலம் நாட்டின் குடியுரிமையை மட்டுமல்ல தேசத்தின் ஆன்மாவை படுகொலை செய்திருக்கிறார். எனவே இந்த குற்றத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அரசியல் ரீதியாக தார்மீகம் பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து இந்த போர் நடைபெறும் தொடரும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு நாடு முழுவதும் பக்கபலமாக இருக்கும். இடதுசாரிகள் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம்” என்று கூறினார்.