முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு; போலீஸ் முன் ஆஜராகாத திமுக கவுன்சிலர்!

சென்னை ராஜா அண்ணாமலை மண்டபத்தில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகியும் சென்னையின் 95வது வார்டு கவுன்சிலருமான சுதா தீனதயாளன் என்பவர், முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். திமுக மூத்த தலைவர்களான கனிமொழி, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரின் முன்பே திமுக கவுன்சிலர் சுதா, முதல்வர் விஜய்யை ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக கவுன்சிலர் சுதாவின்  பேச்சுக்கு தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திமுக துறைமுகம் பகுதிச் செயலாளர் முரளி ஆகியோர் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்திருந்தனர். மேலும் விசாரணைக்கு நேரடியாக ஆஜராகும்படி எஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், திமுக துறைமுகம் பகுதிச் செயலாளர் முரளி இன்று  விசாரணைக்கு ஆஜரானார். ஆனால், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன், ‘தனக்கு உடல்நிலை சரியில்லை’ எனக் கூறி தனது மகளை விசாரணைக்கு ஆஜராக வைத்துள்ளார். அதன்படி அவரின் மகள் போலீஸ் முன் ஆஜராகி, ‘தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று அவரால் ஆஜராக முடியவில்லை’ எனத் தகவல் அளித்துள்ளார்.