தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு விழாவிற்கான ஆயத்தப் பணிகளைப் பார்வையிடவும், இடத்தை தேர்வு செய்யவும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்தார். அப்போது விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ். ஜெயகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரளாகக் கூடி உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆனந்த் மோகன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சத்யபாமா மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, விழா நடைபெறவுள்ள ஆடிட்டோரியம் மற்றும் மேடை அமைக்கும் இடங்களை அமைச்சர் ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடனும், மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். ஜெயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் மோகன், சத்யபாமா ஆகியோருடனும் விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆனந்த் தெரிவித்ததாவது, “தமிழக முதல்வர் அரசு விழாவில் பங்கேற்பதற்காகப் பெருந்துறைக்கு வருகை தரவுள்ளார். அதற்கான பொருத்தமான இடத்தை தேர்வு செய்யவே இன்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் விஜய் வருகை தரும் நாள் மற்றும் விழா குறித்த முழு விவரங்கள் விரைவில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து முறைப்படி வெளியிடப்படும்” என்று கூறினார். அமைச்சர் ஆனந்த்தின் இந்த திடீர் வருகை மற்றும் ஆய்வுப் பணிகள் பெருந்துறை பகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
