காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்து பேசத் தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளது, தமிழகத்தின் பாரம்பரிய நிலைப்பாட்டிலிருந்து ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது, தமிழகம் சட்டப்பூர்வ அமைப்புகள் மூலமான தீர்வை மட்டுமே வலியுறுத்தும்; ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 2 மாநில முதல்வர்கள் மேஜையில் அமர்ந்து பேசி மட்டும் காவிரி பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது என்பதே சென்னையின் உறுதியான வாதமாக இருந்தது. காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் மூலமே நீர் பகிர்வு முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழகம் தெளிவாக இருந்தது. தற்போது, சட்டப்பூர்வமாக பெற்ற உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், அதே வேளையில் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைக் கதவுகளை மீண்டும் திறக்க முதல்வர் விஜய் ஒரு நுட்பமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரையிலான தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் கர்நாடகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது; இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பு நடைபெற்றால், கடந்த 14 ஆண்டுகளில் இரு மாநில முதல்வர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.
தற்போதைய சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்த தீர்ப்பாயத் தீர்ப்பின்படி, ஜூன் 1 முதல் ஜூலை 23 வரை தமிழகத்திற்கு சுமார் 32 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்திற்கு வெறும் 3.5 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததைக் கணக்கில் கொண்டு, வறட்சி காலப் பகிர்வின்படி பார்த்தாலும், குறைந்தபட்சம் மேலும் 3 டி.எம்.சி நீரையாவது கர்நாடகா திறந்திருக்க வேண்டும். இந்த நீர் பற்றாக்குறை வெறும் எண்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; இது காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை. நீர் வரத்து தாமதமானால் குறுவை சாகுபடி பாதிப்பு, விவசாயிகளின் கடன் சுமை அதிகரிப்பு எனப் பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மத்தியஸ்த சட்ட நிபுணருமான கண்ணன் இதுகுறித்து கூறுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது பலவீனத்தின் அடையாளம் அல்ல; அது இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் அரசியல் சாசனக் கடமையாகும். முரண்பாடுகள் நீடிக்கின்றன என்பதற்காகப் பேச மறுப்பது அரசியல் சாசனப் பொறுப்பிலிருந்து விலகுவதாகும். அதேவேளையில், சட்டப்பூர்வ உரிமைகளுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தையை மாற்றாகக் கருதக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முதலமைச்சர்கள் தங்களுக்குள் பேசி ஒத்துழைப்பான சூழலை உருவாக்கலாம்; அரசியல் பகையைக் குறைக்கலாம். ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மாற்றியமைக்க முடியாது. முதல்வர் விஜய்யின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள், விவசாயிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் மத்தியில் சில கவலைகளும் எழுந்துள்ளன. நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் கர்நாடகா காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கடந்து செல்ல முயலலாம் என்றும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தை இதனுடன் முடிச்சுப் போட்டுத் தண்ணீரைத் திறக்க நிபந்தனை விதிக்கலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
நீதிபதி கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வறட்சி காலத்தில் தண்ணீர் திறப்பது மற்றும் மேகதாது அணை கட்டுவது ஆகிய இரண்டும் 2 வெவ்வேறு சட்ட வரம்பிற்குட்பட்ட பிரச்னைகள் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேக்கேதாட்டு திட்டத்திற்கு எதிராகத் தனியாகத் தீர்ப்பாயம் அமைக்கத் தமிழக அரசு கோரியுள்ள நிலையில், இரண்டையும் குழப்பிக் கொள்வது ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவிக்கையில், அரசுக்கு இதில் எந்த குறுகிய அரசியல் நோக்கமும் இல்லை என்றும், முன்னாள் முதல்வர் எம்.கே.ஸ்டாலின் உட்பட அனைவரின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதும், தமிழகத்தில் அது விஜய்யின் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்பதும் அரசியல் ரீதியாக சாதகமாக பார்க்கப்பட்டாலும், நதிநீர் விவகாரங்களில் கட்சி எல்லைகளைத் தாண்டி மாநில நலன்களே முன்னிற்கும் என்பதை வரலாறு உணர்த்துகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இரு மாநில முதல்வர்களும் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளனர். 1972-இல் கருணாநிதி – தேவராஜ் அர்ஸ், 1980-களில் எம்.ஜி.ஆர் – கர்நாடக தலைவர்கள், 1996-97-இல் கருணாநிதி – ஜே.எச். படேல் (5 சுற்றுகள்), 2012 நவம்பரில் ஜெயலலிதா – ஜெகதீஷ் ஷெட்டர் (உச்ச நீதிமன்ற யோசனைப்படி). 1990-ல் தீர்ப்பாயம் அமைப்பதற்கு முன் 22 ஆண்டுகளில் 26 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இச்சந்திப்புகள் அரசியல் பதற்றத்தைக் குறைத்ததே தவிர, நிரந்தரத் தீர்வைத் தரவில்லை.
நேரடி அரசியல் பேச்சுவார்த்தை உடனடியாகத் தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கும், அதே நேரத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையைப் பாதுகாப்பதற்கும் உதவுமானால், இது ஒரு சிறந்த அரசியல் ராஜதந்திரமாகப் பார்க்கப்படும். மாறாக, ஏற்கெனவே பெறப்பட்ட சட்ட உரிமைகளில் குழப்பம் விளைவித்தால், அது விமர்சனத்திற்குள்ளாகும். ஒரு நதி என்பது வெறும் நீர் மட்டுமல்ல; அது வரலாறு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் சார்ந்த விஷயம். முதல்வர் ஒரு உரையாடலைத் தொடங்க முடியும், ஆனால் பருவமழையையோ, வரலாற்றையோ அல்லது சட்டப்பூர்வ அமைப்புகளையோ அவரால் மாற்றிவிட முடியாது.
