முன்னாள் அமைச்சரைக் கீழே தள்ளிவிட்ட பெண் போலீஸ்; கொந்தளிக்கும் கட்சித் தலைவர்கள்!

காவலருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு முன்னாள் அமைச்சர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விடதலா ரஜினி என்பவர், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் 2022-2024 ஆம் ஆண்டு வரை சுகாதரம் மற்றும் குடும்ப நல அமைச்சராக பதவி வகித்தார். இந்த சூழலில், அம்மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், சிலகலூரிபேட் தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் கட்சி பொறுப்பாளரான விடதலா ரஜினி, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘பி-படிவங்களை’ (B-Forms) வழங்க முயன்ற போது போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது விடதலா ரஜினியை சந்திப்பதற்காக யட்லபாடு மாவட்ட ஊராட்சி தொகுதி வேட்பாளரான பாண்டுலா புல்லாப்பாயி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், அவரை காவல்துறையினர் வீட்டின் நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரமடைந்த விடதலா ரஜினி, வெளியே வந்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்தது குறித்து காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக சிலகலூரிபேட் ஊரக உதவி காவல் ஆய்வாளர் பிரியங்காவிடம், விடதலா ரஜினி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு விடதலா ரஜினி தடுமாறி கீழே விழுந்தார்.  இதையடுத்து விடதலா ரஜினி எழுந்து, தள்ளி விட்டதாகக் கூறி காவல் ஆய்வாளர் பிரியங்காவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.