மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துடனான (CBFC) பல மாத கால தணிக்கை போராட்டத்திற்குப் பிறகு, எச். வினோத் இயக்கத்தில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இறுதியாக உலகமெங்கும் வெளியாகத் தயாராகிவிட்டது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என்பதால், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜன நாயகன்’ கருதப்படுகிறது.
இத்திரைப்படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரிய சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இதன் ரிலீஸ் தேதி காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக இந்த மாத தொடக்கத்தில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திரைப்படம் வரும் ஜூலை 23, வியாழக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில், படத்திற்கான அட்வான்ஸ் முன்பதிவுகள் தொடங்கி, டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் விஜய்யின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை சற்றும் குறையவில்லை என்பதை இந்த முன்பதிவு நிலவரம் நிரூபிக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, ‘ஜன நாயகன்’ திரைப் படம் இந்தியளவில் ரூ.6.7 கோடி வசூல் செய்துள்ளது. சினிமா வர்த்தக ஆய்வாளர் ‘சாக்னில்க்’ (Sacnilk) தகவலின்படி, இத்திரைப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் 2,399 காட்சிகள் மூலம் 1,33,904 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு ரூ. 3.86 கோடி வசூலித்துள்ளது. அதேநேரம், இதன் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளுக்கு முன்பதிவு இன்னும் வேகம் எடுக்கவில்லை. மாநில வாரியான அட்வான்ஸ் முன்பதிவில், கர்நாடகாவில் ரூ.2.59 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 2.47 கோடியும், கேரளாவில் ரூ. 1.32 கோடியும் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மணி நேரங்களில் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என்பதால், ஜூலை 23 அன்று இப்படம் பிரம்மாண்டமான ஓப்பனிங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ (Coolie) திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 151 கோடி வசூலித்து, தமிழ் சினிமாவில் முதல்நாள் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு இந்தச் சாதனை விஜய்யின் ‘லியோ’ (Leo – ரூ. 148.5 கோடி) வசூல் வசம் இருந்தது. தற்போது ‘ஜன நாயகன்’ படம் ‘கூலி’ படத்தின் சாதனையை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா சமீபத்திய பேட்டியில், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தணிக்கை சர்ச்சையில் சிக்கிய பதிப்பை விட, தற்போதைய தியேட்டர் பதிப்பில் பல கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் என்டிடிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், திரைப்படத்தில் பல மாற்றங்களும் கூடுதல் சேர்க்கைகளும் செய்யப்பட்டுள்ளன. தியேட்டரில் ரசிகர்கள் பார்க்கப்போகும் அனுபவம் வித்தியாசமாக இருக்கும்; சில புதிய பாடல்களும் பல மாற்றங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல சவால்களைக் கடந்துதான் இந்தத் திரைப்படம் இன்றைய நிலையை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
