மும்பை: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சில விமான சேவைகளை படிப்படியாக மாற்ற இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா குழுமம் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பை இரண்டு விமான நிறுவனங்களும், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டன. மும்பை மற்றும் நவி மும்பை என இரண்டு விமான நிலையங்களையும் அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனமே நிர்வகிக்கிறது.
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது மும்பை. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த விமான நிலையத்தில் முனையம் 1-ஐ மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த பணிகளுக்காக சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, விரிவாக்க பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் இரு விமான நிலையங்களிலும் பயணிகள் போக்குவரத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் சில விமான சேவைகளை நவி மும்பைக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து 2026 டிசம்பர் மாதம் முதல் தினமும் 4 உள்நாட்டு விமான சேவைகளை இயக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2027 ஜனவரி முதல் ஓமன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கான சேவைகளையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஜெட்டா, ரியாத், தம்மாம், தோஹா, மஸ்கட், ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளைப் படிப்படியாக நவி மும்பை விமான நிலையத்துக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2027 பிப்ரவரி மாதம் முதல் மும்பை விமான நிலையத்தில் இருந்து தினசரி 12 சர்வதேச சேவைகளை நவி மும்பை விமான நிலையத்துக்கு மாற்ற இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, பஹ்ரைன், ரியாத், தம்மாம், ஜெட்டா, மதீனா, குவைத், ராஸ் அல் கைமா, புஜைரா, மஸ்கட், டாக்கா, ஜகார்த்தா ஆகிய 11 நகரங்களுக்கான சேவைகள் மாற்றப்பட உள்ளன.
மேலும், காத்மாண்டுவுக்கு தினசரி புதிய விமான சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2027 ஜூலை மாதத்துக்குள் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து 12 சர்வதேச நகரங்களுக்கு இண்டிகோ விமானங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான உள்நாட்டு இணைப்பு விமான சேவைகளும் படிப்படியாக மாற்றப்படும்.
இந்த மாற்றங்கள் மூலம் மும்பை விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதுடன், நவி மும்பை விமான நிலையத்தின் சர்வதேச விமானப் போக்குவரத்தையும் அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவைகளை மாற்றுவதற்கான இறுதி தேதிகள் மற்றும் புதிய சேவைகள் குறித்த விவரங்கள், தேவையான ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் அனுமதிகள் முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.
ஏர் இந்தியா குழுமம், மேற்கு ஆசிய நாடுகளுக்கான தனது சில விமான சேவைகளைப் படிப்படியாக நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு மாற்றத் தொடங்க உள்ளது. இதன் முதற்கட்டமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 2026 டிசம்பர் மாதம் முதல் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து தினமும் 4 உள்நாட்டு விமானங்களை இயக்க உள்ளது.
தொடர்ந்து, தேவையான அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில் குவைத்துக்கான விமான சேவைகளும், ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் ஓமன் நாட்டுக்கான விமான சேவைகளும் 2027 ஜனவரி மாதம் முதல் நவி மும்பை விமான நிலையத்துக்கு மாற்றப்பட உள்ளன.
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் முனையம் 1-ஐ மறுசீரமைப்பது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்காக நிபுணர்களும் சில பரிந்துரைகளை வைத்த நிலையில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தால், ஆண்டுக்கு 1.5 கோடி பயணிகளைக் கையாளும் திறன், 2 கோடியாக அதிகரிக்கும். அதாவது, பயணிகளைக் கையாளும் திறன் சுமார் 33 சதவீதம் உயரும்.
மேலும், சர்வதேச விமானப் போக்குவரத்து தரநிலைகளுக்கு ஏற்ப நவீன பயணிகள் வசதிகள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக, சுமார் 50 லட்சம் பயணிகளை நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 36 லட்சம் பயணிகள், அதாவது இலக்கில் 70 சதவீதம் பேர் மாற்றப்பட உள்ளனர்.
இதன் மூலம், மும்பை விமான நிலையத்தின் முனையம் 1-ல் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான இடவசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை விமான நிலையத்தில் ஆண்டுதோறும் கையாளப்படும் 5.5 கோடி பயணிகளில் சுமார் 9 சதவீதம் பேர் மட்டுமே தற்காலிகமாக நவி மும்பை விமான நிலையத்துக்கு மாற்றப்பட உள்ளனர். மீதமுள்ள 91 சதவீத பயணிகளுக்கான விமான சேவைகள் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.
