மு.க.அழகிரி மகள் கயல்விழிக்கு எதிராக போராட்டம்: எஸ்.பி.ஐ ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், வங்கி ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் சென்னை அண்ணா நகர் கிளை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாறில் கயல்விழிக்குச் சொந்தமான வணிக வளாகக் கட்டிடம் ஒன்றில், எஸ்பிஐ வங்கியின் என்.ஆர்.ஐ (SBI NRI Branch) கிளை செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் உள்ள ‘லிஃப்ட்’ பழுதானது குறித்து, வங்கி மேலாளர் ஹர்சன் சிங் கட்டிடத்தின் உரிமையாளரான கயல்விழியிடம் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி வங்கிக்கு வந்த கயல்விழி, மேலாளர் ஹர்சன் சிங்கிடம் பேசிக் கொண்டிருந்தபோதே எதிர்பாராதவிதமாக அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இச்சம்பவம் வங்கி அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை சாஸ்திரி நகர் காவல்துறையினர் கயல்விழி மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு கயல்விழிக்குக் காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், நேற்று சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கயல்விழி ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் அவரைக் கைது செய்தனர். இருப்பினும், காவல் நிலையப் பிணையிலேயே (Police Station Bail) நேற்றிரவே அவர் வெளியே வந்தார்.

கயல்விழி காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், வங்கி ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழகக் கிளைப் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கயல்விழியின் இந்த வன்முறைச் செயல், வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கான கண்ணியம் குறித்தப் பெரும் கவலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவும், பணிபுரியும் இடங்களில் அவர்களின் கண்ணியத்தைக் காக்கவும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link