மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் முழு விவரங்களை வெளியிட தயங்கும் தவெக அரசு: சொல்கிறார் நயினார்

சென்னை: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும் வெளியிட தவெக அரசு எதற்கு தயங்குகிறது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை;

“நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்” என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது தவெக அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை. “மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், ஆர்டிஐயிடம் பதிலில்லை.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு.

மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும், “அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்” என்றே ஒரே பதில் மட்டும் தான் ஆர்டிஐயிடம் இருந்து கிடைக்கிறது. அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றை சேகரித்து ஆர்டிஐ மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்?

தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?

உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும். வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link