மெக்கா மசூதியில் 'ஒழுக்கக்கேடான செயல்': வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு சவுதியில் மரண தண்டனை

​ரியாத்: புனித மெக்கா நகரிலுள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா பகுதியைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவரும் மெக்காவில் உள்ள மசூதியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் மசூதி வளாகத்தில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி சவுதி போலீசாரால் முன்பு கைது செய்யப்பட்டனர்.

​சவுதி சட்ட விதிகளில் உள்ள தாஸிர் பிரிவின்படி, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மன்னரின் ஒப்புதலுடன் கடந்த அக்.,14 அன்று மெக்கா பகுதியில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ரகசியமாக நடந்ததா?

அவர்கள் இருவருக்கும் என்ன தண்டனை விதிக்கப்பட்டது, விசாரணை எவ்வாறு நடந்தது போன்ற விவரங்களை சவுதி அரசு முன்கூட்டியே வங்கதேச அரசிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரே வங்கதேச துணைத் தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மேலும், அந்த நபர்கள் மசூதிக்குள் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டதாகவும், அதற்குத்தான் இந்த உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், சவுதி உள்துறை அமைச்சகம் ‛ஒழுக்கக்கேடான செயல்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர்கள் செய்த குற்றம் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை வெளியிடவில்லை.

சர்ச்சை:

அண்மையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவரசா என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, இலங்கை அரசின் தூதரக தலையீட்டால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், வங்கதேச தொழிலாளர்களின் விவகாரத்தில், வங்கதேச அரசு தலையிடுவதற்கு முன்பே, சவுதி அரசு அதிரடியாக மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இது வங்கதேச அரசு மட்டுமன்றி, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச அரங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link