காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, குறுவை சாகுபடி சரிவு, ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறியுள்ள நிலை மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவுக்கு ஆதரவான மறைமுக அரசியல் சதியில் தமிழக காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆழியூர், புலியூர், கடம்பறவாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களில் நீரின்றி தரிசாக கிடக்கும் விளைநிலங்களை நேரில் பார்வையிட்ட பி.ஆர். பாண்டியன், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து அவர்களது வேதனைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 6.31 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு வெறும் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது டெல்டா விவசாய வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவு என்றும், காவிரி நீர் கிடைக்காததால் விவசாயிகள் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள் வேலைவாய்ப்பின்றி வேறு தொழில்களை தேடி இடம்பெயரும் நிலை உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெல்டா மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்த அவர், தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருப்பதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றார். அந்த பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் தாமதமின்றி உத்தரவு பிறப்பித்து தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேநேரத்தில், கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவர், “ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு வழங்கக்கூடாது” என்று வெளிப்படையாக கூறியிருப்பது கவலைக்குரியது என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்க மறுத்தால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையும், அதனை உறுதி செய்த உச்சநீதிமன்ற உத்தரவையும் அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசின் உதவியை காவிரி மேலாண்மை ஆணையம் நாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசும் அரசியல் பாரபட்சமின்றி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக அரசின் நெல் கொள்முதல் நடைமுறைகள் குறித்தும் பி.ஆர். பாண்டியன் கவலை தெரிவித்தார். கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இதுவரை முழுமையாக அரிசியாக மாற்றப்படாமல் கிடப்பில் இருப்பதாகவும், தற்போது அவற்றை நடப்பாண்டு சம்பா மற்றும் கார் குறுவை நெல்லுடன் கலந்து அரவை செய்ய தமிழக அரசு முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறினார். கடந்த ஆண்டுக்கான நெல் நீண்டகாலமாக கிடப்பில் இருந்ததால் மனிதர்கள் உணவாக பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றிருக்கலாம் என்பதால், அவற்றை புதிய நெல்லுடன் கலந்து பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அரிசி ஆலை உரிமையாளர்களை இதற்காக கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவதாக கூறி காங்கிரஸ் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாலும், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அந்த கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் தமிழக எம்.பி.க்கள் மத்தியில் தேவையற்ற பிளவை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசியல் ரீதியாக எதிரெதிர் அணிகளாக இருந்தாலும், மேகதாது அணை விவகாரத்தில் இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியும் மறைமுகமாக கர்நாடகாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாகவும், இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் தேசிய தலைமை தனது செல்வாக்கை பயன்படுத்தி கர்நாடக முதலமைச்சருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காவிரி என்பது அரசியல் பிரச்சினை அல்ல; கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதார பிரச்சினை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் ஆர்.பி. பாலசுப்பிரமணியன், உயர்மட்ட குழு உறுப்பினர் சண்முகம், நாகை ஒன்றிய செயலாளர் செல்லப்பா, ஒன்றிய தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் உடனிருந்தனர். டெல்டா மாவட்டங்களில் நீடித்து வரும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
