மேற்காசிய பதற்றம் கவலை அளிக்கிறது; நிதானத்தை கடைபிடிக்க இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டித்ததுடன், ”மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பது மிகுந்த கவலையளிக்கிறது; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என ஐ.நா.வில் தெரிவித்தது.

மத்திய கிழக்கின் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடந்த விவாதத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல்களை மிகுந்த கவலைக்குரியது.

இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை மீட்டெடுப்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலில் ஏற்பட்ட ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு, தாக்குதல்கள் மீண்டும் துவங்கி இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

மேலும் பதட்டங்களை உடனடியாகத் தணிக்குமாறு இந்தியா அழைப்பு விடுக்கிறது. மாலுமிகளை இலக்காகக் கொண்ட வன்முறைச் செயல்களையும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச கப்பல் போக்குவரத்து வழிதடங்களில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைப்பதையும் இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது.

பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சட்டத்திற்கு இணங்க, தடையற்ற கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் கூடிய விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு பர்வதனேனி ஹரிஷ் பேசினார்.

Source link