யானை வழித்தடத்தில் 12 கட்டடங்கள் இடிப்பு

கூடலுார்:

நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி, சீகூர் யானை வழித்தடத்தில், விதிமீறி கட்டப்பட்ட சுற்றுலா விடுதிகள் உட்பட, பிற கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2008ல் வக்கீல் ‘யானை’ ராஜேந்திரன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து, 2011ல் யானை வழித்தடத்தில் உள்ள அனுமதி இல்லாத சுற்றுலா விடுதிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்பின், யானை வழித்தடம் தொடர்பாக எழுந்த பிரச்னைகள் குறித்து ஆராய, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இக்குழு, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற, உரிமையாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், ‘கிளன்வியூ’ விடுதியில் உள்ள, 11 கட்டடங்கள், ‘வைல்டு அட்வஞ்சர்’ விடுதியில் ஒரு கட்டடம், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் உதவியுடன், நேற்று இடித்து அகற்றப்பட்டன.

Source link