“யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் இன்று (19-10-26) ஆய்வு செய்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மின்சார வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக முதற்கட்டமாக 2,600 ஊழியர்கள் ஒப்பந்தம் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கடந்த 1 மாதத்துக்கு முன்பாகவே பயிற்சி கொடுத்திருக்கிறோம். அவர்கள் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்காக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த துறையில் கூடுதலாக 2,400 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கேபிள் பழுது ஏற்பட்டுள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டையில் 2 டிரான்ஸ்பார்மர் பழுதானது. ஆனால், அங்கு 3 நாட்கள் கரண்ட் இல்லை என திமுகவினர் கூறினார். நாங்கள் அங்கிருந்த அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரைய்ஜ்ம் விசாரித்த போது நேற்று மாலை 4 மணியளவில் கரண்ட் போயிருக்கிறது. அடுத்த 4 மணி நேரத்தில் அந்த டிரான்ஸ்பார்மரை மாற்றுவிட்டார்கள். எனவே 3 நாள் கரண்ட் இல்லை என்பது தவறான தகவல். அங்கு இருக்கிற திமுகவினரின் தூண்டுதலில் பெயரில் இதை பரப்பியிருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

டெண்டர் மூலமாக தான் ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் ஊழியர் தேர்வுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. ஏற்கெனவே 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்று கூறினார். இதையடுத்து பெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலத்தில் தான் பெத்தபெட்டமைன் சப்ளை செய்யப்பட்டது. போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு மோசமான நிலைமைக்கு கொண்டு போனதே திமுக தான். அதை கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்பது தான் முதல்வருடைய ஒரே குறிக்கோள். யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சார்பில் யாரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இல்லை. ஏதாவது தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.