தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை லட்சுமி, ஒரு நடிகரை மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாமா என்று அழைப்பதும், அவருடன் விளையாட்டாக சண்டைபோடுவதும், அதன்பிறகு சண்டை பெரிதாக இருவரும் பேசாமல் இருப்பதும் என பல செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை குமாரி ருக்மணி மகள் லட்சுமி. 1968-ம் ஆண்டு ஜீவனாம்சம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், எம்.ஜி.ஆருடன் மாட்டுக்கார வேலன், படத்தில் நடித்துள்ளார். மேலும் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள லட்சுமி,தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 650 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1977-ம் ஆண்டு வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக தேசிய விருதை பெற்றவர்.
1978-ம் ஆண்டு வெளியான ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். ரஜினிக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்துள்ள லட்சமி, வேல் படத்தில் சூர்யாவின் பாட்டியாகவும் நடித்துள்ளார் லட்சுமி, கடந்த 1969-ம் ஆண்டு பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 1974-ம் ஆண்டு அவரை பிரிந்த லட்சுமி 1 வருடம் கழித்து 1975-ம் ஆண்டு நடிகர் மோகன் சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.
5 வருடம் கழித்து 1980-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்த நடிகை லட்சுமி, 7 வருடங்கள் கழித்து 1987-ம் ஆண்டு நடிகரும் இயக்குனருமான சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது 73 வயதாகும் லட்சுமி, படங்களில் பாட்டி உள்ளிட்ட முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்று வரும் லட்சுமி, சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகர் சிவக்குமாருடன் இருந்த நட்பு குறித்து பேசியுள்ளார்.
சிவக்குமார், லட்சுமி இருவரும் அவன் அவள் அது, இன்று நீ நாளை நான், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் என பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனிடையே சிவக்குமார் குறித்து பேசிய லட்சுமி, ஷூட்டிங் ஸ்பாட்டில், யோவ் மாமா இங்க வாயா என்று சொல்வேன். அவர் இதோ பாரா அடிச்சேன்னா பாரு என்று சொல்வார். ஒரு சில முறை யோவ் சிவா என்று சொல்வேன். என்னைவிட 10 வயது பெரியவர் அவர். நான் இப்படி சொன்னவுடன் அடிப்பாவி பேரை சொல்லியா கூப்பிடுற அடிடா அவள என்று சொல்வார்.
இப்படியே கலாட்டாவாக போய் சில சமயங்களில் சண்டையாகிவிடும்.
1-2 மாதங்கள் பேசாமல் இருப்போம். அப்போது லவ் சீன் எல்லாம் வரும், நடித்து முடித்தவுடன், பேசவே மாட்டார். நல்ல லவ் சீன் வரும்போது நடித்துவிட்டு கட் என்று சொன்னவுடன் பேசவே மாட்டார். தள்ளி நில்லு, தள்ளி நில்லு என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதன்பிறகு தான் இருவரும் உணர தொடங்கினோம். பள்ளிக்கூடத்தில் இருந்து நேராக நடிக்க வந்துவிட்டேன்.
அவரும் ஓவிய கல்லூரியில் இருந்து அப்படியே வந்துவிட்டார். அங்க விளையாட வேண்டியது, அந்த வயது ஒத்திருப்பவர்கள் யாரும் இல்லை.
எங்கள் இருவருக்கும் இடையே அப்படி ஒரு நிலை இருந்தது, இப்போது நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு 4-5 மணி நேரம் உரையாற்றுவது எல்லாம் பெரிய விஷயம். அவரது உழைப்பே பெரிய விஷயம். அவரை மாதிரி சின்சியர் வொர்க்கிங் ஹியூமனை பார்க்கவே முடியாது என்று லட்சுமி கூறியுள்ளார்.
