புதுடில்லி: தமிழகத்தில் விஜய் தலைமையிலான காங்-தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக பாஜ தேசிய தலைமை காணொளி ஒன்றை வெளியிட்டு கண்டித்துள்ளது.
இந்த காணொளியை பாஜ தலைமை, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறது. காணொளி மொத்தம் 1 நிமிடம் 4 விநாடிகள் ஓடுகிறது.
அதில், விஜய் முதல்வராகும் முன்பு நடித்த கத்தி திரைப்படத்தில் தப்பிய கைதிகளை பிடிக்க, சிறையின் வரைபடத்தை விஜய் கேட்பது போன்ற ஒரு காட்சியை இணைத்து உள்ளது.
சினிமாவில் இப்படி இருக்கும் செயல் நிஜத்தில் இல்லை. தமிழகத்தில் புழல் சிறையில் ஆகஸ்ட் 28ம் தேதி முதல்வர் விஜய் ஆய்வு நடத்தினார். அக்டோபர் 23ம் தேதி புழல் சிறையில் இரு கைதிகள் தப்பினர். தேனி மாவட்டம், தேக்கம்பட்டி கிளைச்சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம், காங்கிரஸ் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதையே பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள், தங்களை தாங்களே முன்னிறுத்திக் கொள்வதிலும், ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதிலும் பிசியாக இருக்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்று விஜய் பேசினார். ஆனால் நிஜத்தில் தமிழகத்தில் அப்படி இல்லை. காவல்துறை பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இதற்காக தான் மக்கள் அவருக்கு ஓட்டு போட்டார்களா? என்றும் அந்த வீடியோவில் பாஜ கேள்வி எழுப்பி கண்டித்துள்ளது.
