பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து சென்னையில் விளம்பர நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதில் சாய் பல்லவி கலந்து கொண்டு பேசுகையில், “நான் ரஹ்மான் சாரின் பெரிய ரசிகை. ஸ்கூலில் அவருடைய பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். அவருடைய பினன்ணி இசை தான் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நினைவுகளைக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த நிறைய விஷயங்கள் எனக்கு நினைவிருக்காது. ஆனால் அவருடைய பின்னணி இசைக் கேட்டால் அந்த சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். அவருக்கு நன்றி.
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா 10 வருஷமாக இந்த படத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் வந்து 3 வருஷம் ஆகிவிட்டது. அப்போதே தெரிந்துவிட்டது அவர்கள் எவ்ளோ வேலை செய்திருக்கிறார்கள் என்று. தமிழ் வெர்ஷனுக்கு டப்பிங் செய்யும்போது வசனங்கள் அவ்வளவு சரியாக இருந்தது. தமிழின் உச்சரிப்பு, உணர்வு எல்லாமே ஒரு நேரடி தமிழ் படங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அதற்கு சரியான ஆட்களை அவர்கள் தேர்ந்துடுத்துள்ளார்கள். இதே போல் அந்தந்த மொழிகளுக்கும் சரியான ஆட்களை தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் ராமாயணாக் கதையை அவரவர் மொழிகளில் பார்க்கலாம்.
உலக அரங்கில் பெருமையுடன் கொண்டு செல்லக்கூடிய மிகச்சிறந்த படைப்பை உருவாக்க நமித் மல்ஹோத்ரா விரும்பினார். சுமாரான ஒரு பதிப்பை உருவாக்க அவருக்கு விருப்பமில்லை, அதனால் மிகச்சிறந்த நடிகர்கள், படக்குழுவினர், இசையமைப்பாளர்கள் மற்றும் சண்டைக் கலை நிபுணர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்தார். இந்தியாவின் மிக முக்கியமான கதைகளில் ஒன்றை, உலகமே வியக்கும் வகையில் மிகச்சிறந்த தரத்தில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் உருவாக்கியுள்ளார். இந்த உணர்வை எங்களால் முழுமையாக வெளிப்படுத்த முடிந்ததா என்று தெரியவில்லை. இதற்காகவும், நீங்கள் செய்து வரும் அனைத்து காரியங்களுக்காகவும் உங்களுக்கு மிக்க நன்றி.
யஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’, ‘டாக்சிக்’படங்களை பார்த்திருப்போம். அவர் எங்கு வந்தாலும் தமிழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆதரவளிப்பதைப் பார்க்கிறேன். சொந்த மொழியில் யஷ் படம் எடுத்தது போல கொண்டாடுகிறார்கள். வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கலைத்திறன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். ரன்பீர் கபூரை நான் எப்போது சந்தித்தாலும் அந்தந்த வாரத்தில் வெளியாகும் தமிழ் படங்களை பார்த்துவிட்டு பேசுவார். என்னுடைய அமரன் படத்தை தாண்டி மகாராஜா, பத்தா என எல்லா படத்தையும் பார்த்து பேசுவார். அவர் சினிமாவை அவ்வளவு நேசிக்கிறார். முக்கியமாக தென்னிந்திய சினிமாவை. எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு ஏதோ ஒரு வகையில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துவிடுவார். அது ஒரு கனிவான செயல். அவர் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை, இருப்பினும் செய்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய மனதில் இதற்கென ஒரு தனி நூலகமே இருக்கிறது. அவரை ‘அனிமல்’, ‘பர்பி’ போன்ற படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் ‘ராம்’ கதாபாத்திரத்தில் கண்களின் வழியாக நடித்திருக்கிறார்” என்றார்.
