ஐப்பசி மாத வளர்பிறையில் வரக் கூடிய ஏகாதசிக்கு, ரமா ஏகாதசி என்று பெயர். இந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி வியாழக்கிழமை அன்று இந்த அற்புதமான ரமா ஏகாதசி விரதம் அமைந்துள்ளது. இந்த நாளில் எப்படி விரதம் இருந்தால் பெருமாளின் பரிபூரண அருளை பெற முடியும், இந்த நாளில் விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து சமயம் தமிழ் வாசகர்களுக்காக விளக்கமாக கூறி உள்ளார் சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள்.
ரமா ஏகாதசி சிறப்புகள் :
‘ரமா’ என்பது மகாலட்சுமியின் பெயர்களில் ஒன்றாகும். இத்தினத்தில் விஷ்ணு பகவானுடன் லட்சுமி தேவியையும் சேர்த்து வழிபட செல்வம், நல்வாழ்வு மற்றும் மனமகிழ்ச்சி பெருகும். ரமா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதாலும், இதன் கதையைக் கேட்பதாலும் அறியாமல் செய்த பாவங்கள் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் போன்ற பெரும் பாவங்களும் நீங்கும். இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் பித்ரு தோஷங்கள் நீங்கி, முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.
இப்புனித விரதம் பக்தர்களின் ஆன்மீக மற்றும் லௌகீக (வாழ்க்கை) விருப்பங்களை நிறைவேற்றி, இறுதியில் விஷ்ணுவின் திருவடியை அடையச் செய்யும். மன்னர் முசுகுந்தனின் மருமகன் சோபனன் இந்த விரதத்தின் மூலம் மாந்திராசல மலையில் திவ்யமான ராஜ்யத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தசமி நாளன்று ஒருவேளை மட்டும் சாத்விக உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று முழுமையாக உண்ணாநோன்பு (அரிசி, தானியங்கள் தவிர்த்து) கடைப்பிடிக்க வேண்டும். துவாதசி அன்று உரிய பாரணை நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும்.
ரமா ஏகாதசியில் விரதம் இருப்பதன் பலன்கள் :
ரமா ஏகாதசியில் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பாவ நிவர்த்தி, புண்ணிய சேர்க்கை, மன அமைதி ஏற்படும். இந்த நாளில் விரதம் இருந்தால், உடல் சுத்தமாகி, மனம் தெளிவடையும். இந்த நாளில் விஷ்ணுவின் திருநாமங்களையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்தால் உயர்ந்த ஆன்மீக பலன் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி, மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரம், தொழில், வேலை ஆகியவற்றில் இருக்கும் தடைகள் நீங்கி, முன்னேற்றம், வள்ர்ச்சி ஏற்படும்.புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரமா ஏகாதசி விரத முறை :
– இந்த நாளில் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு முழு உபவாசமாக விரதம் இருக்க வேண்டும்.
– காலையில் எழுந்து குளித்து விட்டு, பெருமாள் கோவில் தீர்த்தத்தை வாங்கி குடித்து விட்டு விரதத்தை துவக்க வேண்டும்.
– ரமா ஏகாதசி நாளில் கண்டிப்பாக துளசி சாப்பிடவே கூடாது.
– பெருமாளுக்கு தீபாராதனை காட்டி, பூஜை செய்து வழிபடலாம்.
– பெருமாளின் திருநாமங்களை சொல்லுவது, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ஆகியவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். பகவத் கீதை பாராயணம் செய்ய வேண்டும்.
– ஏகாதசி நாளான அக்டோபர் 22ம் தேதி முழுவதும் விரதம் இருந்து, அக்டோபர் 23ம் தேதி துவாதசி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
– துவாதசி அன்று பாரணையின் போது அகத்திக்கீரை, நெல்லிக்காய் பச்சடி, மோர்க்குழம்பு, சீரகம்-மிளகு ரசம், தயிர், பாயசம் ஆகியவை செய்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.
– துவாதசி அன்று பாரணை செய்த பிறகு பகலில் தூங்கக் கூடாது. பாரணை செய்த பிறகு வழக்கமான நம்முடைய வேலைகளை செய்யலாம்.
