சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க சென்ற பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மதன் என்கிற சுள்ளான் மதன் (26). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த 2024ஆம் ஆண்டில் நடந்த சகோதரர்கள் இருவரை கொலை செய்த சம்பவத்தில் கைதாகி சிறை சென்றார். இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஜாமீனில் சுள்ளான் மதன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த சூழலில் நேற்று முன் தினம் (17-10-26) ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண சுள்ளான் மதன் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுள்ளான் மதனை சூழ்ந்தனர். இதை கண்டு சுதாரித்துக் கொண்ட சுள்ளான் மதன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று, மதனை அங்குள்ள ஒரு கரும்புத் தோட்டத்திற்குள் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுள்ளான் மதனை கொலை செய்த கும்பலை பிடிப்பதற்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரதீப் (26), பாலமுருகன் (19), பாபு (23) ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளையைப் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இரு சகோதரர்களை சுள்ளான் மதன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
