அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிறப்பு புலனாய்வு குழு, அங்கு நாள்தோறும் அன்றாட பணிகளில் ஈடுபடும் அனைவரையும் விசாரிக்க முடிவு செய்து உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமர் கோவிலை, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
உலகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வரும் இந்த கோவிலில், பெறப்பட்ட நன்கொடையில் முறைகேடு நடந்ததாக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் புகார் தெரிவித்தன.
இதையடுத்து, மாநில அரசால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து, அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலர் சம்பத் ராயின் கார் டிரைவராக இருந்த டின்னு எனப்படும் ராம்சங்கர் யாதவ், இவரின் உறவினர் மணீஷ் யாதவ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், சம்பத் ராய்க்கு நெருக்கமானவராக கருதப்படும் டின்னு, நன்கொடை பெட்டிகளை பாதுகாக்கும் பணியிலும், மணீஷ் யாதவ், நன்கொடை களை எண்ணும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், முறைகேடு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு தீவிரப்படுத்தியுள்ளது.
அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்களை தாண்டி கோவிலில் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருபவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நன்கொடை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்த 50 பேர், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பரிந்துரையின் பேரில் பணியில் அமர்த்தப்பட்டது தெரியவந்து உள்ளது.
இதையடுத்து, அவர்களின் பின்னணி குறித்தும், பணத்தை எண்ணும் பணியில் சேர்ந்ததற்கு பின் வருமானத்தை மீறி அவர்கள் ஏதேனும் சொத்து சேர்த்தனரா என்பது குறித்தும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாகம் சார்ந்த சில மூத்த அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அவ்வப்போது அறக்கட்டளையின் செயல்பாடுகளில் ஈடுபடும் சில அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.
அறக்கட்டளையின் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலம் வாங்குதல் தொடர்பான பிற நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
