பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கடந்த ஜூலையில் வெளியான படத்தின் முதல் டிரெய்லர் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகள் எதிர்பார்த்த அளவு இல்லாததாக விமர்சனங்கள் எழுந்தது. பின்பு அண்மையில் வெளியான புது டிரெய்லர் அந்த விமர்சனங்களை சரி செய்தது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் பட புரொமோஷனில் பிஸியாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. இதனிடையே முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும் வரவேற்பு இப்படத்திற்கு இருக்கிறது. முன்பதிவுல் மட்டும் ரூ. 5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு மேற்கு வங்கத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “ராமாயணம் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘தி கேரளா ஸ்டோரி’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘தி பெங்கால் ஃபைல்ஸ்’ ஆகிய படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதைப் போலவே, ‘ராமாயணம்’ திரைப்படத்திற்கும் வரி விலக்கு வழங்கப்படும். இதனால் எதிர்காலத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனன் மற்றும் மகாபாரதம் குறித்த திரைப்படங்களை அதிகளவில் காண முடியும்” என்றார்.
