பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ராவணத் தாண்டவம்’ மற்றும் ‘மங்கள் ரங்’ என்ற பாடல்கள் அண்மையில் அடுத்தடுத்து வெளியானது. இப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை சந்தித்தது. இசை பொருத்தமாக இல்லை எனவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் ஒரு சிலர் விமர்சித்தனர்.
இந்த நிலையில் விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்திடம் இது குறித்து பேசிய அவர், “நாங்கள் ஒரு பாடலை உருவாக்கும் போது பல கட்டங்களாக யோசித்து, பரிசோதனை செய்து மாற்றங்களுக்கு உட்பட்டு உருவாக்குகிறோம். அதை வெளியிட்ட பிறகு மக்கள் சொல்லும் கருத்துகளைக் கவனிப்பதற்கான ஆற்றல் எங்களிடம் இல்லை. பலமுறை சோதித்துப் பார்த்த பிறகே ஒரு பாடலை வெளியிடுகிறோம். என் மகன் என்னிடம், ‘நேற்று இப்படிச் சொன்னவர்கள், இன்று மன்னிப்பு கேட்கிறார்கள்…’ என்று சொல்வான். அதற்கு நான், ‘பரவாயில்லை, நான் என் பணியைச் நேர்மையுடன் செய்திருக்கிறேன், மக்கள் இதைக் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறுவேன்.
ஆரம்ப காலத்தில் 10 ஆண்டுகள் முடிந்த பிறகு, ‘நீங்கள் அந்த முதல் 10 ஆண்டுகளில் செய்தது போன்றே மீண்டும் செய்ய வேண்டும்’ என்று மக்கள் கூறினார்கள். ஆனால், ‘ராக்ஸ்டார்’ அல்லது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற பழைய வெற்றிகளிலேயே நான் தேங்கிவிட முடியாது. ஒரு நதியைப் போல எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது ‘ராமாயணம்’ வந்துள்ளது, இதில் உள்ள பாடல்கள் ஐந்து வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரிந்த ஒரு காவியம். இது போன்ற ஒரு காவியத்திற்கு இசையமைப்பதும், இந்தியா மற்றும் உலகத்துடன் இணைந்து இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதும் எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம்” என்றார்.
