2024ஆம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை அள்ளியது. சிறந்த தமிழ் படம் ‘ராயன்’, சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் படம் கேப்டன் மில்லர், சிறப்பு பிரிவு – தனுஷ்(கேப்டன் மில்லர்), சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி(அமரன்), சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ் குமார்(அமரன்), சிறந்த படத்தொகுப்பு – கலைவாணன்(அமரன்), சிறந்த சண்டைப் பயிற்சி – அனல் அரசு(மகாராஜா), சிறந்த துணை நடிகை – சச்சனா நமிதாஸ்(மகாராஜா), சிறப்புப் பிரிவு – சுரேண் ஜி(ஒலிக்கலவை – மெய்யழகன்) மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு – டி.எஸ். ஹரிஹர சுதன்(ப்ளூ – குறும்படம்) ஆகிய படங்கள் வென்றது.
இந்த விருதில் ராயன் படத்துக்கு அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படத்தை விட சிறந்த படங்கள் இருக்கும் போது அது எப்படி தேர்வு செய்யப்பட்டது என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைத்து வந்தனர். மேலும் தனுஷ் இன்ஃப்ளூவன்ஸ் செய்து விருது வாங்கிவிட்டாரா எனவும் கேட்டனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தேசிய விருது தேர்வு குழு உறுப்பினர், நடன அமைப்பாளர் கலா, “இவர்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஒன்றுமே கிடையாது. ராயன் படத்தை தனுஷ் அவ்வளவு அழகாக இயக்கியிருந்தார்” என்றார். அதே சமயம் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலளிக்கையில், “தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? ஏன் அவர்கள் இன்ஃப்ளுவன்ஸ் செய்து விருதை வாங்கவில்லை? இது அரசு மற்றும் ஜூரி குழு எடுக்கும் முடிவு” என்றார்.
இந்த நிலையில் விமர்சனம் குறித்து படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்த துஷாரா விஜயனிடம் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விமர்சனத்தை தள்ளிவைத்துவிட்டு விருது கிடைத்ததற்காக சந்தோஷப்படுங்கள்” என முடித்துக் கொண்டார்.
